இந்த ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் (WPL 2023) தொடக்க சீசனில் இருந்து 377.49 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது.

நம் நாட்டில் கிரிக்கெட் மோகம் இருக்கிறது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.  கிரிக்கெட்டை வாழ்கையில் ஒரு முக்கிய பகுதியாக கருதும் ஏராளமான ரசிகர்கள் நம் நாட்டில் உள்ளனர். முன்பெல்லாம் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு தான் மவுசு அதிகம். ஆனால் தற்போது பெண்கள் கிரிக்கெட்டும் சற்று  படிப்படியாக பிரபலமடைந்து வருகிறது. அதாவது, பிசிசிஐ பெண்கள் கிரிக்கெட்டை ஊக்குவித்து வருகிறது. அதன்படி, பெண்கள் கிரிக்கெட்டின் புகழ் அவ்வப்போது அதிகரித்து வருகிறது. மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா போன்ற வீராங்கனைகள் தங்கள் ஆட்டத்தால் நல்ல ரசிகர்களை சம்பாதித்துள்ளனர்.

இதற்கிடையே பெண்கள் கிரிக்கெட்டை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்த ஆண்டு மகளிர் பிரிமியர் லீக் (WPL) தொடங்கப்பட்டது. 2023ல் மார்ச் 4 ஆம் தேதி முதல் மார்ச் 26 வரை மும்பையில் 2 இடங்களில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் பிசிசிஐ-க்கு பணத்தைக் கொண்டு வந்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் முதல் சீசனிலேயே 377.49 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. பிசிசிஐ பொருளாளர் ஆஷிஷ் ஷெலரின் அறிக்கையின்படி, 2022-23 நிதியாண்டில், WPL மூலம் வாரியம் ரூ. 377.49 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அவர் திங்கள்கிழமை தெரிவித்தார். 2022-23 நிதியாண்டில் பிசிசிஐயின் மொத்த வருவாயில் WPLல் இருந்து உபரி 6% இருக்கும் என்று ஷெலர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் இந்த காலகட்டத்தில் பிசிசிஐயின் வருவாயில் 37% இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்தும் (ஐபிஎல்), 38% ஊடக உரிமைகள் விற்பனையிலிருந்தும் கிடைத்தது. மூத்த ஆண்கள் சர்வதேச சுற்றுப்பயணங்களில் இருந்து 10% சம்பாதித்தது.

WPL 2023 இந்த ஆண்டு மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், UP வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகளுடன் விளையாடப்பட்டது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பட்டத்தை வென்றது.

சமீபகாலமாக கிரிக்கெட்டில் ஆண்கள் அணிக்கு இணையான ஆண்டு சம்பளம் பெண்கள் அணிக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தது அனைவரும் அறிந்ததே. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் ‘பிசிசிஐ’ என்பது குறிப்பிடத்தக்கது.