சீன விஞ்ஞானிகள் குளோனிங் தொழில்நுட்பம் மூலம் அதிக பால் தரும் “சூப்பர் ஆடுகளை” உருவாக்கி கால்நடைத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். பொதுவாக, உலக அளவில் பால் தரும் உயர்தர ஆடுகளைப் பாரம்பரிய முறையில் வளர்த்து, ஒரு புதிய மந்தையை உருவாக்க குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீண்ட காலம் தேவைப்படும்.

ஆனால், சீனாவின் ‘நார்த்வெஸ்ட் ஏ அண்ட் எப்’ பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர், இந்த நீண்ட காலக் காத்திருப்புக்குத் தங்களின் நவீன அறிவியல் சோதனை மூலம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஆண்டுக்கு 2,800 கிலோவுக்கும் அதிகமாகப் பால் தரும் ‘சானென்’ ரக ஆடுகளின் உடல் செல்களை எடுத்து, ஆய்வகத்தில் மேம்பட்ட குளோனிங் தொழில்நுட்பம் மூலம் புதிய கருக்களை உருவாக்கினர்.

இந்தச் சோதனையின் வெற்றியாக, தற்போது ஒரே பிரசவத்தில் 4 ஆண், 2 பெண் என 6 ஆட்டுக்குட்டிகள் ஆரோக்கியமாகப் பிறந்துள்ளன. சீனாவின் 15-வது ஐந்தாண்டுத் திட்டத்தின்படி, நாட்டின் பால் உற்பத்தியைப் பெருக்க மரபணுத் திறனும், அதிக நோய் எதிர்ப்புச் சக்தியும் கொண்ட இந்த “சூப்பர் ஆடுகள்” ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றன.