குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரில் காய்கறி வியாபாரம் செய்து வரும் விமல் கரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் மேட்ரிமோனி தளத்தின் மூலம் எனக்கு பெண் வேண்டும் என பதிவு செய்திருந்த நிலையில், அசாமை சேர்ந்த ரிடாதாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்த 6 மாதங்கள் ஆன நிலையில் சொத்து பிரச்சனை தொடர்பாக தன்னுடைய அம்மா அழைப்பதாக  கூறிவிட்டு ரிடாதாஸ் கிளம்பி சென்றுள்ளார். அதன் பிறகு ரிடாவின் வழக்கறிஞர் என ஒருவர் விமலுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஒரு லட்ச ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார். பணத்தை அனுப்பிய பிறகு வழக்கறிஞர் அனுப்பிய ஆவணம் விமலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரிடாவின் மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு ரிடா குறித்து விமல் கூகுளில் தேடிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது மோசடி, கொலை, கொள்ளை, விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற பல்வேறு வழக்குகள் ரிடா மீது பதியப்பட்டுள்ளது.

அதோடு 4 வருடங்களில் 5000 கார்களை திருடிய அணில் சவுகான் என்ற குற்றவாளியின் மனைவிதான் ரிடா என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு இவர்கள் மீது கார் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதும், அணில் சௌகான் சிறைக்கு சென்றதால் அதன் பிறகு அவரிடம் தொடர்பு இல்லாததால் ரிடா விமலை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. மேலும் விமல் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ரிடா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.