ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக போட்டியில் 20 ரன்களை எடுத்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். 

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கடைசி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து வேகமான தொடக்கத்தை பெற்றது. இந்தப் போட்டியில், அனுபவமிக்க பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் தனது அணி வீரர்களுடன் தனி பட்டியலில் தனது பெயரை சேர்த்துள்ளார்.

 சௌராஷ்டிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஸ்மித் 20 ரன்கள் எடுத்ததன் மூலம் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 5000 ரன்களை நிறைவு செய்தார். அவர் தனது 129வது இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் அதிவேகமாக 5000 ரன்களை கடந்த 4வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதில் முதல் இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், வெறும் 115 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை கடந்துள்ளார். அதேபோல 126 இன்னிங்ஸ்களில் இந்த நிலையை எட்டிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

128 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை முடித்த டீன் ஜோன்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார். 129 இன்னிங்ஸ்களில் 5000 ஒருநாள் ரன்களை கடந்த ஸ்டீவ் ஸ்மித்தின் பெயர் நான்காவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் 61 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 74 ரன்கள் எடுத்தார். 

தொடரைப் பற்றி பேசுகையில், ஆஸ்திரேலியா ஏற்கனவே இந்தத் தொடரை இழந்துவிட்டது. ஆஸ்திரேலியாவை க்ளீன் ஸ்வீப் செய்யும் நோக்கத்தில் இந்திய அணி இந்தப் போட்டியில் களமிறங்கவுள்ளது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.. தற்போது இந்திய அணி களமிறங்கி இலக்கை துரத்தி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்காக 5000 ஒருநாள் ரன்களை மிக வேகமாக கடந்தது :

115 இன்னிங்ஸ்- டேவிட் வார்னர்

126 இன்னிங்ஸ்- ஆரோன் ஃபின்ச்

128 இன்னிங்ஸ்- டீன் ஜோன்ஸ்

129 இன்னிங்ஸ்- ஸ்டீவன் ஸ்மித்