ஏப்ரல் 2015 முதல் டிசம்பர் 2016 வரை அச்சடிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகளில் சுமார் ரூ.88,000 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் தொலைந்து விட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. அச்சகங்கள் பற்றி ஆர்டிஐ கீழ் பெறப்பட்ட தகவல்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

ரிசர்வ் வங்கி ஆவணங்களின் படி, ரூ.500 நோட்டுகள் 7,260 மில்லியன் தாள்கள் மட்டுமே ரிசர்வ் வங்கிக்கு வந்திருக்கிறது. எனவே ரூ.88,032.5 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் எங்கு சென்றது?, அவ்வளவு நோட்டுகளும் தொலைந்துவிட்டதா என நேற்று சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் 88,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் தொலைந்து விட்டதாக வெளியான புகார்களை ரிசர்வ் வங்கி மறுத்திருக்கிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,நோட்டு அச்சடிக்கும் ஆலைகளிலிருந்து நோட்டுகள் காணாமல் போனதாக ஊடகங்களில் பரவும் தகவல்களில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளது.