
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா ஜெகதீஷ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது கடந்த மே 18ஆம் தேதி, தனது வீட்டின் அருகே உள்ள கோவிலில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அருகில் வசிக்கும் ஒரு நபர் கோவிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதனால் பயத்தில் சிறுமி கத்தியதும் அவரது வாயை மூடியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த பாட்டியை அந்த நபர் தள்ளிவிட்டு தப்பியோட முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.அப்போது பாட்டி சத்தமிட்டதும் அக்கம்பக்கத்தினர் கூடி வந்தனர்.
மக்கள் அந்த நபரை பிடித்து அடித்து, போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் அதே நாளில், போலீசார் குற்றவாளியை விடுதலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில், பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மெடிக்கல் கடையில் வேலை செய்துவரும் நபர் எனவும், மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல எனவும் சிறுமியின் குடும்பத்தினர் வலியுறுத்துகிறார்கள்.
இதுகுறித்து ஏசிபி மயங்க் திவாரி கூறுகையில், முதலில் வழங்கப்பட்ட தகவல் உறுதியானதாக இல்லாததால் வழக்குப் பதிவு செய்ய நேரம் எடுத்துக்கொண்டதாகவும், தற்போது சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக கிடைத்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்தார்.
அதேசமயம், சிறுமியின் குடும்பத்தினர், போலீசார் உண்மையை மறைத்துள்ளதாகவும், குற்றவாளி குறித்த அனைத்து விவரங்களும் அவர்கள் அளித்திருந்தும், தாமதமாகவே கைது செய்ததற்காக கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், சிறியவயதிலேயே குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது.