டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் PGT நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வந்த அன்விதா சர்மா (29), குடும்பத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் கௌரவ் கௌசிக் என்பவரை அன்விதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த மார்ச் 16-ஆம் தேதி, “சமைத்துவிட்டேன், சாப்பிடுங்கள்” என தனது கணவருக்கு மெசேஜ் அனுப்பிய பின்னர், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கான காரணங்களை பெற்றோருக்கும், சகோதரருக்கும் வாட்ஸ்அப் மூலம் எழுதி அனுப்பியுள்ளார்.

அன்விதாவின் கடைசி குறிப்பு மிகுந்த உணர்ச்சி வசப்படுத்தும் விதமாக இருந்தது. அதில் அவர்கள் என்னை இல்லை என் வேலையை தான் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் நான் செய்த மோதிலும் அது அவர்களுக்கு போதவில்லை. அவர்கள் மாமியாரின் மீது அக்கறை செலுத்தும் ஒரு மருமகளை மட்டும் தான் விரும்பினார்கள். கடந்த ஐந்து வருடங்களில் என் கணவர் என்னை கேலி செய்தது போன்று வேறு யாரும் கேலி செய்திருக்க முடியாது.

என் கணவன் என் வங்கிக் கணக்கு, காசோலை புத்தகம் மற்றும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும். தயவுசெய்து என் மகனை கவனித்துக் கொள்ளுங்கள். அவன் தனது தந்தையைப் போல மாறுவதை நான் விரும்பவில்லை” என அவர் தனது பெற்றோருக்கு எழுதியுள்ளார். அன்விதாவின் மெசேஜை பார்த்த உடனே அவரது குடும்பத்தினர் அவசரமாக தொடர்பு கொள்ள முயன்றும், எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் அவர்கள் வீட்டிற்கு சென்ற போது அன்விதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து அன்விதாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் அதிக வரதட்சணை கோரியும், அவரை தொடர்ந்து உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியும் வந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்விதாவின் சம்பளம், ஏடிஎம் கார்டுகள், காசோலை புத்தகங்கள் அனைத்தையும் அவர்கள் கட்டுப்படுத்தி வந்ததாகவும், மார்ச் 16 அன்று கடுமையான தொல்லை கொடுத்ததாலும்  தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், அன்விதாவின் கணவர் கௌஷிக், மாமனார் மற்றும் மாமியார் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.