சீனாவின் வடக்கு பகுதியை வரும் வார இறுதியில் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் சூறாவளி காற்று காரணமாக, 49 கிலோவுக்கும் குறைவான உடல் எடையுடையவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு சீன அரசு ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, மணிக்கு 93 மைல் வேகத்தில் மங்கோலியாவிலிருந்து வீசும் காற்று இந்த பகுதிகளை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  சீனாவின் வடக்கு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விளையாட்டு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், இரு நாட்களில் மட்டும் 159 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த வானிலை மாற்றங்கள், சீனாவிற்கு அதிகமான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீன அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டுமே இயற்கை பேரழிவுகள் காரணமாக 1.27 பில்லியன் டொலர் நேரடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம், இன்னர் மங்கோலியா மற்றும் வடகிழக்கு சீனாவின் சில பகுதிகள் கடும் பனியால் மூடப்படலாம் என எச்சரிக்கையிடப்பட்டுள்ள நிலையில், மற்றொரு புறம் தெற்கு சீனா கடுமையான ஆலங்கட்டி மழையால் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிக்கப்படக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.