இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்த நிலையில் தீவிர போராக மாறும் அபாயம் ஏற்பட்டது. அதாவது பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்திய நிலையில் அதனை இந்தியா தடுத்து நிறுத்தியதோடு பதிலடி தாக்குதலும் கொடுத்தது.

இந்நிலையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருவரும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதன்பிறகு இன்று ஆயிரம் வருடங்களாக தொடரும் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அமெரிக்கா உதவும் என்றும் அவர் அறிவித்தார். இதனை காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது. அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தில் எதற்காக மூன்றாம் தரப்பு தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

 

அந்த பதிவில், இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருப்பதால் வலுவான முதுகெலும்பு இருக்கிறது. அனைத்து அட்டூழியங்களையும் எதிர்த்து போராட வேண்டிய விருப்பமும் எங்களுக்கு இருக்கிறது. 4000 மைல் தொலைவில் இருக்கும் எந்த நாடுகளும் இந்தியர்களுக்கு ஆர்டர் போட வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா இன்று இந்திரா காந்தியை மிகவும் செய்கிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் வெளிநாடுகளின் அழுத்தத்திற்கு பணிந்து போகாத இந்திரா காந்தி பேசிய வீடியோக்களையும் காங்கிரஸ் வைரல் ஆக்கி வருகிறது.