அமெரிக்காவின் பிரபல ‘இன்டெல்’ (Intel) நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராகப் பணியாற்றி, கோடிக்கணக்கில் ஊதியம் பெற்று வந்தவர் அனந்தன் அய்யாசாமி. தனது தாய்நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதலால், அமெரிக்காவின் சொகுசு வாழ்க்கை மற்றும் தனது 12 வயது மகளின் பிரிவைத் தாங்கி, தமிழகத்தின் தென்காசி மாவட்டத்திற்குத் திரும்பினார். கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து, தென்காசியில் ஏரிகளைத் தூர்வாருதல், பேருந்து நிலையங்கள் அமைத்தல், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல் எனப் பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வந்தார்.

​நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட அனந்தன் அய்யாசாமி, துரதிர்ஷ்டவசமாகத் தோல்வியடைந்தார். இந்தத் தோல்விக்குப் பிறகு அவர் பதிவிட்ட ஒரு சமூக வலைதளப் பதிவு அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. “எனது மகளின் சிறுவயது பருவத்தையும், கோடிக்கணக்கான ரூபாயையும் இழந்து நான்கு ஆண்டுகள் உண்மையாகச் சேவை செய்தேன். ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரு வாரம் கொடுக்கப்பட்ட பணம் எனது நான்கு கால சேவையைத் தோற்கடித்துவிட்டது” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, “அப்பா, அரசியல் என்றால் என்ன?” என்று வீடியோ காலில் கேட்ட தனது மகளின் கேள்விக்கு, வாழ்நாளில் முதல்முறையாகப் பதில் சொல்ல முடியாமல் மௌனமாக நின்றதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.