மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் நகரில் தேவ்ராஜ் வன்ஷ்கார் என்ற ஒரு 4 வயது சிறுவன் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு 12 வயது சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போய்விட்டான். அந்த சிறுவனை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவனுடன் விளையாடிய சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமி சிறுவனை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து சென்று விட்டதாக கூறினார். அதோடு சிறுவனுக்கு பெர்ரி பழங்களை சாப்பிட கொடுத்ததாகவும் அந்த சமயத்தில் ஒரு நாய் வந்து சிறுவனை தூக்கிச் சென்றதாகவும் சிறுமி கூறியதோடு ஒரு பாபா தன் மீது மந்திரம் ஏவி விட்டதால் சிறுவன் இறந்து விட்டான் எனவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக உண்மையை கண்டறிய போலீசார் ஒரு நூதன முறையை கையாண்டனர். அதாவது ஒரு பெண் போலீஸ் தனக்கு சாமி வந்தது போல் நாடகமாடினார். அப்போது சிறுமி அந்த போலீஸிடம் சிறுவன் இறந்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்.? மீண்டும் அந்த சிறுவனை உயிரோடு கொண்டு வந்து விடுவீர்களா என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் போலீஸ் நாங்கள் உனக்கு உதவி செய்கிறோம் நீ ஜெயிலுக்கு போக மாட்டாய் என்று கூறியுள்ளார். அப்போது தான் சிறுமி அந்த சிறுவனை கொலை செய்து ஒரு இடத்தில் குழி தோண்டி புதைத்ததாக கூறினார்.

பின்னர் போலீசாரை சிறுமி காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று அந்த சிறுவனை புதைத்த இடத்தை காண்பித்தார். கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸ் குழுக்கள் மோப்ப நாய் உதவியுடன் சிறுவனின் உடலை தேடிய போதிலும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் சிறுமி அடையாளம் காட்டிய போது தான் சிறுவனின் உடலை கண்டுபிடிக்க முடிந்தது. மேலும் அந்த சிறுமி எதற்காக சிறுவனை கொலை செய்தார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.