
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியைச் சேர்ந்த செல்லையா (70). இவர் விவசாயி. அவரது மனைவி பழனியம்மாள், 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
இவர்களின் மூத்த மகன் கந்தசாமி, இரண்டாவது மகன் கணேசன், மூன்றாவது மகன் முருகையா மற்றும் ஒரு மகள் சண்முகத்தாய் உள்ளனர். குடும்ப சொத்துகளில் ஒரு வயலை விற்றுத் தொகையாக கிடைத்த பணத்தை, செல்லையா நியாயமாக 4 பாகங்களாகப் பிரித்து அனைவருக்கும் கொடுத்தார். தனக்கென ரூ.1,25,000 வைத்திருந்தார்.
இந்நிலையில், கட்டிடத் தொழிலாளியான கணேசன் (36) என்பவர் தந்தையிடம் உதவி கோரியபோது, செல்லையா உதவ மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக குடித்து விட்டு தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மே 27ஆம் தேதி, வழக்கம்போல தகராறு ஏற்பட்ட நிலையில், கோபமடைந்த கணேசன், அரிவாளால் தந்தையை சரமாரியாக வெட்டி தப்பியோடினார். செல்லையாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியபோதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுபற்றி செல்லையாவின் மூன்றாவது மகன் முருகையா கொடுத்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மலையான்குளத்தில் பதுங்கியிருந்த கணேசனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர். கணேசனுக்கு வேளாங்கன்னி என்ற மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர்.