
மருங்கூர் அருகே இரவிபுதூர் பகுதியில் தாணுமாலய பெருமாள்-நாகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. இவர்களுடைய மகன் மணிகண்டனுக்கு 38 வயது ஆகும் நிலையில் டெம்போ டிரைவர் ஆக இருக்கிறார். இவர் தனக்கு திருமணமாகாததால் மன வேதனையில் மதுவுக்கு அடிமையானார். இவர் நேற்று வழக்கம்போல் தன்னுடைய அறைக்கு தூங்குவதற்காக சென்றார். அப்போது அவருடைய பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் மாலையில் வீட்டிற்கு வந்தனர்.
தங்களுடைய மகனின் அறை நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் மாலை நேரத்தில் அங்கு சென்று பார்த்தனர். ஆனால் கதவை திறக்க முடியாததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மணிகண்டன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.