இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் கேட்பாரற்று குவிந்து கிடக்கும் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்காக நிதிநிலைத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் ஒரு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறது. இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது வங்கிகளில் உரிமை கோரப்படாத பணத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க சிறப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பொதுத்துறை வங்கிகள் உரிமை கோரப்படாத 35,000 கோடி நிதியை ரிசர்வ் வங்கிக்கு மாற்றியுள்ளது. இந்த பணம் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேல் எந்த பரிவர்த்தனையும் செய்யாத வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த உரிமை கோரப்படாத தொகை 10.24 கோடி வங்கி கணக்குகளுடன் தொடர்புடையதாகும். மேலும் உரிமை கோரப்படாத தொகையை திரும்ப செலுத்துவது தொடர்பான போர்டல் இன்னும் 4 மாதங்களில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.