ஹைதராபாத் நகரின் புறநகர் பகுதியில் நாட்டின் மிகப் பெரிய சுரங்கப் பாதை மீன்காட்சியகம் கட்டப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 350 கோடி மதிப்பீட்டில் அரசு, தனியார் பங்களிப்பு உடன் இந்த மெகா திட்டமானது உருவாக்கப்படும் என தெரிகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் ஹைதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையம் (HMDA) கடந்த வெள்ளிக்கிழமை இதற்கான உலகளாவிய டெண்டர்களை அறிவித்தது. இந்த மாத இறுதிக்குள் டெண்டர்களை சமர்ப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

முதலில் தொழில்நுட்ப ஏலங்கள் பரிசீலிக்கப்படும் எனவும் பின்  தொகை ஏலம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டரை பெறும் நிறுவனம் அடுத்த 2 வருடங்களில் திட்டத்தை முடிக்க வேண்டும் என கால வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மீன்காட்சியகத்துக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு இது நீருக்கடியில் இருந்து மீன்களைப் பார்ப்பது போன்ற உணர்வை வழங்கும். அதோடு இந்த மீன் காட்சியகத்துக்கு மூவாயிரம் மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டிகளிலிருந்து தண்ணீர் வழங்கப்படும். பல்வேறு வகையான மீன்களுடன் சுறா மற்றும் டால்பின்களும் இந்த மீன் காட்சியகத்தில் இடம்பெற இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.