கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டினம் காப்பி காட்டுவிளை பகுதியில் ஸ்ரீகுமார்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்ரீகா(12) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். குழந்தையாக இருக்கும்போது ஸ்ரீகா நாட்காட்டியை அதிகம் நேசிக்கும் குணம் உடையவராக இருந்துள்ளார். யாராவது பிறந்தநாளை கூறினால் காலண்டரை பார்க்காமலேயே அந்த நாள் எந்த கிழமை வருகிறது என்பதை கூறுவார். ஒரு பண்டிகை தேதியை கூறினால் அடுத்த வினாடியே அது எந்த கிழமை வருகிறது என்பதை கூறுவார்.
கொரோனா காலகட்டத்தில் செல்போன் மூலம் படிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் காலண்டர் பார்ப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். இப்போது எந்த பயிற்சியும் இல்லாமல் ஸ்ரீகா கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என 1900 முதல் 2200-ஆம் ஆண்டு வரை எந்த தேதியில் கூறினாலும் அதற்கான கிழமையை சரியாக கூறுகிறார். 10 ஆண்டுகளுக்கான பண்டிகை நாட்களை கூறினால் அந்த பண்டிகைகள் எந்த கிழமையில் வருகிறது என்பதையும் தெரிவிக்கிறார். தனது திறமையை வளர்த்துக் கொண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என ஸ்ரீகா கூறியுள்ளார்.