பழைய டூத் பிரஷ்ஷைத் தொடர்ந்து பயன்படுத்துவது வாய்க்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் நலத்திற்கே பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவர் விமல் அரோரா போன்ற நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரின் டூத் பிரஷ்ஷில் சுமார் 700 வகையான வாய்ப் பாக்டீரியாக்கள் (Mouth Bacteria) வளர்கின்றன. இவை உருவாக்கும் ‘ப்ளாக்குகள்’ மற்றும் ‘கறைகள்’ வாயில் ஆரம்பித்து, நாளடைவில் இதய நோய்கள் (Heart Disease), நீரிழிவு (Diabetes) போன்ற தீவிரமான உடல்நலக் குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும். வாயில் சேரும் இந்தப் பாக்டீரியாக்களும், அழற்சி மூலக்கூறுகளும் இரத்த ஓட்டம் வழியாகப் பயணித்து, உடலில் முக்கிய உறுப்புகளில் மாற்றங்களைத் தூண்டக்கூடியவை.

குறிப்பாக, மோசமான வாய் சுகாதாரமும் (Oral Hygiene), சரியான நேரத்தில் பிரஷ்ஷை மாற்றாமல் இருப்பதும் நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நீண்ட நாள் (chronic) ஈறுகளில் ஏற்படும் அழற்சியானது (Inflammation), இதயக் கோளாறுகளுக்கு வழிவகுப்பதுடன், இரத்தக் குழாய்களில் தடிப்பு ஏற்படும் ‘அதிரோஸ்கிளிரோசிஸ்’ (Atherosclerosis) என்னும் கடுமையான பாதிப்புக்கும் காரணமாகிறது. எனவே, அனைவரும் தினமும் இரு முறை பல் துலக்குவது, ஃப்ளாஸ் பயன்படுத்துவது, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மற்றும் மருத்துவர்களின் அறிவுரைப்படி முப்பது நாட்களுக்கு ஒரு முறையேனும் டூத் பிரஷ்ஷை மாற்றுவது போன்ற நல்ல பழக்கங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.