கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராரெட்டிகுப்பம் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டிதுரை(30), பாக்யராஜ்(33) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் விவசாய பணிக்காக டிராக்டருக்கு டீசல் வாங்கிகொண்டு நெய்வேலியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் மந்தாரக்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது காப்பான்குளத்தைச் சேர்ந்த தங்கதுரை, ஸ்டாலின், சஞ்சய் ஆகிய 3 பேரும் அண்ணன் தம்பி வந்த மோட்டார் சைக்கிள் வழிமறித்து 500 ரூபாய் கேட்டு தகராறு செய்தனர். அப்போது பாக்யராஜ் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். இதனால் கோபமடைந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்த டீசலை பாக்யராஜ் மீது ஊற்றி தீ வைக்க முயன்றனர்.

இதனை அந்த வழியாக வந்த சிலர் தட்டி கேட்டதால் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கதுரை உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.