இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு (100), கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை நந்தனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் எடுத்து, தலையில் தையல் போடப்பட்டதை  தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நூறு வயதைக் கடந்த நிலையில், வயது மூப்பினால் ஏற்பட்டுள்ள உடல்நல குறைபாடுகளுக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்காக நரம்பியல், நுரையீரல், இருதய நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் மருத்துவர்களால் ஆன சிறப்பு குழு அமைக்கப்பட்டு, நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அவரது குடும்பத்தினரும், அவரை அன்புடன் நேசிக்கும் கட்சியினரும், பொதுமக்களும் நிம்மதி அடைய காரணமாக அமைந்துள்ளது.