தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 29 நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் முதல் தேர்தல் களமாக வடசென்னை பகுதியின் பெரம்பூர் தொகுதியைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காகப் பெரம்பூர் கண்ணதாசன் நகர் பகுதியில் விஜய் தங்கிப் பிரச்சாரம் மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வசதிகளுடன் கூடிய சொகுசு வீடு ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. நாளை (மார்ச் 25) முதல் விஜய் தனது சூறாவளிப் பிரச்சாரத்தைப் பெரம்பூரிலிருந்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் போதைப் பொருள் புழக்கம் போன்ற பிரச்சினைகள் அதிகம் உள்ள இந்தத் தொகுதியைச் சீரமைத்து, சிங்கப்பூருக்கு இணையாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் விஜய் களம் காண்பதாக அக்கட்சியினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் இந்த அதிரடி வருகை, திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் வடசென்னையில் மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
