உலக அளவில் 2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2 பில்லியன் மக்கள் என்பது உலக மக்கள் தொகையில் 26 சதவீதம் ஆகும். மக்களின் வாழ்க்கைக்கு தண்ணீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் 2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் கிடைக்கவில்லை என்பது மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு தகவல் ஆகும். இந்நிலையில் உலக அளவில் 2.6 பில்லியன் மக்களுக்கு சுகாதார வசதி கிடையாது. இந்த அச்சுறுத்தல் நகரங்களில் அதிகமாக இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டில் 9.30 மில்லியன் நகர்புற மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்தது.

இந்த எண்ணிக்கை 2050-ம் ஆண்டில் 1.7-2.4 பில்லியனாக அதிகரிக்கும் என உலக தண்ணீர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கிறதா என்று ஒரு அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு சுமார் 305 மாவட்டங்களில் நடத்தப்பட்ட நிலையில், 26 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் கிடைத்த பதில்களை வைத்து ஆராயப்பட்டது. இந்த ஆய்வில் நாடு முழுவதும் 97 சதவீத குடும்பங்களுக்கு இதுவரை பாதுகாப்பான தண்ணீர் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.