ஒடிஸா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பழைய போடம்பேட்டா கடற்கரையில், கடலுக்குள் மறைந்திருந்த கங்காதேவி கோயிலின் கோபுரப் பகுதி மீண்டும் வெளிப்பட்டுள்ளது. கடற்கரையில் கடல் நீர் பின்வாங்கியதைத் தொடர்ந்து, மணலுக்கு அடியில் புதைந்திருந்த கோயிலின் ஒரு பகுதி தற்போது தென்படத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கோயிலைப் பார்வையிட்டு வருகின்றனர்.

சுமார் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் கங்காதேவி கோயில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கோயில் முழுமையாக நிறுவப்பட்டு குடமுழுக்கு நடைபெறுவதற்கு முன்பாகவே கடல் அரிப்பால் அது கடலுக்குள் மூழ்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து கடல் நீர் முன்னேறியதால், கோயில் அமைந்திருந்த பகுதியைச் சுற்றியிருந்த குடியிருப்புகளும் படிப்படியாக கடலுக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.

 

ஒரு காலத்தில் மக்கள் வசித்து வந்த இந்தப் பகுதியில் ஏராளமான வீடுகள் இருந்ததாகவும், காலப்போக்கில் கடல் அலைகள் நிலப்பகுதியை அரித்து வீடுகளை ஒன்றன்பின் ஒன்றாக கடலுக்குள் இழுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பழைய போடம்பேட்டா பகுதியின் நில அமைப்பே மாறியுள்ளது. தற்போது கடல் நீர் சில தொலைவு பின்வாங்கிய நிலையில், மணலுக்கு அடியில் புதைந்திருந்த கோயிலின் கோபுரப் பகுதி மீண்டும் வெளியே தெரிந்துள்ளது.

கடலுக்குள் மறைந்திருந்த கோயிலின் பகுதி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்ணுக்குத் தென்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயிலின் கோபுரம் வெளிப்பட்ட தகவல் பரவியதையடுத்து, ஏராளமானோர் கடற்கரைக்கு சென்று அதைப் பார்த்து வருகின்றனர். கடல் அரிப்பால் ஒரு காலத்தில் குடியிருப்புப் பகுதியாக இருந்த இடம் தற்போது கடலாக மாறியுள்ள நிலையில், மீண்டும் வெளிப்பட்டுள்ள இந்தப் பழமையான கோயில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.