மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் நேற்று முன்தினம் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அஜித் பவாரின் தேசிய கட்சிக்கு தாவினார். இவர் நடிகர் சல்மான்கானுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். இவருடைய மகன் ஜீஸ்கான் எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு சென்று விட்டு வெளியே வந்த போது பாபா சித்திக் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இவருடைய கொலைக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் ராகுல் காந்தி பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு விட்டதாகவும் படுகொலைகள் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கொலை வழக்கில் இதுவரை குர்மாயில் பல்ஜித் சிங் (23), தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19) ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களுக்கு நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ள நிலையில் நடிகர் சல்மான் கானுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த எம்.பி பப்பு யாதவ் சொன்ன கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சட்டம் மட்டும் தனக்கு அனுமதி கொடுத்தால் 24 மணி நேரத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை ஒட்டுமொத்தமாக அழித்து விடுவேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி அரசாங்கத்திற்கு சவால் விடுவதோடு மக்களை கொன்று குவிக்கிறான். எல்லோரும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறோம். மேலும் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா, கர்னி சேனா தலைவரின் கொலையில் முக்கிய பங்கு வகிக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது பாபா சித்திக் படுகொலையிலும் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.