கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் சிசிடிவி கேமரா கட்டாயம் வைக்க வேண்டும் எனவும் விதிகளை பின்பற்றாவிட்டால் சிலை வைப்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும்  ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலைகள் வைப்பதற்கான நிபந்தனைகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணகிரியில் வைக்கின்ற இடங்களில் சிசிடிவி கட்டாயம் என தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைப்பது தொடர்பாக பொதுமக்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரயு  தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விநாயகர் சிலை வைக்கப்படக்கூடிய இடத்தில் சிசிடிவி கட்டாயம் வைக்க வேண்டும். இல்லை எனில் அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் சரயு கூறியுள்ளார்.

அதோடு விநாயகர் சிலையோடு 2 பேர் 24 மணி நேரமும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் நிபந்தனையோடு சிலைகளை வைக்க வேண்டும், இல்லையேல் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். பெரிய அளவிலான சிலைகளை வைக்காமல் களிமண் சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும் எனவும், அரசின் உத்தரவுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.