மும்பையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளிக்கான நேர்காணல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. சுமார் 2216 பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற இருந்தது. ஆனால் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அந்த நிறுவனத்தில் குவிய தொடங்கினர். ஒரு கட்டத்தில் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்களால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர்கள் விண்ணப்பங்களை மட்டும் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறினர்.

அதாவது விண்ணப்பங்களை பார்த்துவிட்டு நேர்காணலுக்கு தொடர்பு கொண்டு அழைக்கிறோம். அதன் பின் வந்தால் போதும் என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் ஊழியர்கள் தெரிவித்துவிட்டனர். அந்த நிறுவனத்தின் அறிவிப்பில் சுமார் 3 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் சுமைதூக்கும் தொழிலாளி வேலைக்கு ரூ‌.20,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வேலைக்கு ஆனால் பெருமளவில் பட்டதாரி இளைஞர்கள் தங்கள் விண்ணப்பங்களுடன் வந்தனர். இது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சியின் எம்.பி வர்ஷா கெய்க்வாட் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் கடந்த 10 வருட பாஜக ஆட்சியில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.