பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசு பள்ளிகளில் மும்மொழி கல்வி கொள்கையை வலியுறுத்தி சம கல்வி எங்கள் உரிமை என்ற கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை என்பது காங்கிரஸின் கொள்கை. இதனை எதிர்த்தவர் பிரதமர் மோடி. அப்படி இருக்கும்போது முகாந்திரம் இல்லாத பிரச்சனைக்காக மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தவே அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளனர். இது தேவையில்லாமல் நடந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பாஜக எழுப்பிய  ஒரு கேள்விக்கு கூட பதில் கிடைக்கவில்லை.

அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மூன்றாவது ஒரு மொழியை கற்க கூட வாய்ப்பில்லை. கண்டிப்பாக அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். அப்போது புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். கூட்டணி தொடர்பாக நாங்கள் இன்னும் யாருடனும் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தவில்லை. தேர்தலுக்கு  இன்னும் காலமும் நேரம் இருப்பதால் நெருங்கும் சமயத்தில் அது பற்றி பேசுவோம் என்று கூறினார். மேலும் முன்னதாக பாஜக கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக இன்னும் ஆறு மாதத்தில் பதில் சொல்கிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில் அண்ணாமலை எங்களுக்கு அதிமுக எதிரி கிடையாது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.