
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி வரும் என்று கூறி வருகிறார். திமுக மற்றும் பாஜகவை விமர்சிக்கும் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து ஒரு இடத்தில் கூட அதிமுகவை பற்றி விமர்சிக்கவில்லை. இதனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் கூட்டணி அமைப்போம் என்கிறார்கள். தமிழக வெற்றி கழகத்தினர் விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் கூட்டணி அமைப்போம் என்கிறார்கள். இதனால் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவின்போது எம்ஜிஆர் போன்று கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு வெற்றி பெறுவோம் என்று விஜய் கூறிய நிலையில் ஆதவ் அர்ஜுனா இனி தேர்தல் வரும் வரையில் தமிழக வெற்றிக்கழகம் தான் எதிர்க்கட்சி விஜய் தான் எதிர்க்கட்சி தலைவர் என்றும் கூறினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, 2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என்று விஜய் பகல் கனவு காண்கிறார். விஜய் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக தான் அப்படி பேசுகிறார். எம்ஜிஆர் உடன் யாரையும் ஒப்பிட முடியாது. மேலும் விஜய் எம்ஜிஆர் ஆக முடியாது என்று கூறினார்.