
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நடிகர் விஜயின் முதல் மாநாடு குறித்தும் அவர் பேசிய கருத்துக்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளித்தார். இது குறித்து அவர் கூறும் போது, விஜய் தற்போது அவருடைய கட்சி கொள்கைகளை அறிவித்துள்ள நிலையில் ஒரு கட்சியின் தலைவராக பாஜகவை மறைமுகமாக விமர்சித்த நிலையில் திமுகவை எதிரி என அறிவித்துள்ளார். அவருடைய கொள்கைகள் சரியா தவறா அவர் அறிவித்தது சரியா தவறா என்பது பற்றி கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றார்.
பின்னர் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று விஜய் கூறிய நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் விஜய் துணை முதல்வராகவும் செயல்படுவார்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஊடகங்களில் பரபரப்பான செய்தி வேண்டும் என்பதற்காக இப்படி கேள்விகளை கேட்டுப் போட்டு வாங்குகிறீர்கள். அதிமுகவுக்காக வகுத்த கொள்கைகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அமைக்கப்படுவது ஆகும்.
அதே சமயத்தில் கொள்கை என்பது நிலையானது என்பதால் அதற்கு தகுந்தார் போன்று தான் கூட்டணி பற்றி எல்லாம் முடிவு செய்யப்படும். இதுகுறித்த அறிவிப்புகள் தேர்தல் சமயத்தில் வெளியாகும் என்றார். மேலும் முன்னதாக விஜய் தன் மாநாட்டில் பாஜகவை மறைமுகமாக விமர்சித்த நிலையில் திமுகவை நேரடியாகவே எதிரி என்று அறிவித்துவிட்டார்.
அதாவது திராவிட மாடல்ன்னு சொல்லி மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஒரு குடும்ப அரசியல் செய்யும் கட்சிதான் நம்முடைய முதல் எதிரி என்று விஜய் அறிவித்த நிலையில் அது திமுக தான் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதே நேரத்தில் அதிமுகவை பற்றி விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ளார். இதன் காரணமாக அதிமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு மறைமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்து தான் விஜய் அப்படி பேசியதாக ஒரு கருத்து நிலவுகிறது.