2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற உள்ள 2023  ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது. உலக கோப்பை அக்டோபர் 5ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. இந்நிலையில் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லாபுசாக்னே நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா 18 பேர் கொண்ட அணியை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் 3 பேரை தவிர்த்து இறுதி அணி பட்டியல் வெளியிடப்பட்டது. 18 பேர் கொண்ட அணியில் இருந்த ஆரோன் ஹார்டி, நாதன் எல்லிஸ் மற்றும் தன்வீர் சங்கா ஆகியோர் நீக்கப்பட்டனர். மேலும் ஆல்ரவுண்டர் டிம் டேவிட்  அணியில் இடம் பெறவில்லை.

நேற்று அறிவிக்கப்பட்ட அணியில் இந்த வீரர்களால் இடம் பெற முடியவில்லை. அவர்கள் இப்போது அணியில் இருந்து வெளியேறினாலும், ஆஸ்திரேலியா அணியில் மாற்றங்களைச் செய்ய செப்டம்பர் 27 வரை அவகாசம் உள்ளது. இந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல் போன்ற மூத்த வீரர்கள் உள்ளனர். அலெக்ஸ் கேரி மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக உள்ளனர். இவர்களைத் தவிர டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோரும் பேட்டிங் வரிசையில் உள்ளனர்.

மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக அணியில் இடம்பிடித்துள்ளனர். பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், ஆஷ்டன் அகர், ஆடம் சம்பா மற்றும் சீன் அபோட் ஆகியோர் சிறப்பு பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள்.

முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம்  அறிவிக்கப்பட்டது.

உலகக் கோப்பைக்கு முன், ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும். இந்தத் தொடரின் மூலம், பாட் கம்மின்ஸ் தனது அணியின் தரத்தை சிறந்த முறையில் சோதிக்க முடியும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இந்த ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதே நேரத்தில், உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் முதல் ஆட்டம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணி :

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் ஆகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.