மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்கிறார். 2019 ஆம் ஆண்டிலிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஐந்தாவது யூனியன் பட்ஜெட் ஆகும். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக முழுமையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும். இதில் வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் முதலீடு சார்ந்த வளர்ச்சியை மையமாக வைத்து வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டை அறிவிக்க அரசு இந்த வாய்ப்பை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 2023 பட்ஜெட்டில் வரி செலுத்துபவர்களின் நலனுக்காக சில நடவடிக்கைகள் இருக்கலாம். அதாவது வரி விதி மாற்றங்கள் தொடர்பான முதல் ஐந்து எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பதை காண்போம்.

1. பிரிவு 80 C வரம்பு மாற்றம்.

வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 C-ன் கீழ் விலக்கு என்பது வரி செலுத்துபவர்கள் பெரும்  பொதுவான வரி சேமிப்பு வழியாகும். இதில் பல்வேறு மத்திய அரசின் சிறுசேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அதாவது பிரிவு 80 C-ன் கீழ் ரூ.1.5 லட்சம் வரம்பு 2014 முதல் திருத்தப்படவில்லை. அரசாங்கம் இந்த வரம்பை குறைந்த பட்சம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.2.5 லட்சம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில வல்லுநர்கள் இந்த வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என பரிந்துரைத்து வருகின்றனர்.

2. அடிப்படை வரிவிலக்கு வரம்பு மாற்றம்.

வருமான வரி சட்டத்தின் கீழ் அடிப்படை விலக்கு வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என பல வல்லுனர்கள்  அரசுக்கு பரிந்துரை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வருமான வரி விதிகளின் கீழ் அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.2.5 லட்சம் சம்பாதிக்கும் தனிநபர்கள் எந்த ஒரு வருமான வரியும் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

3. உயர் பிரிவு 80 D.

கொரோனா தொற்று காலகட்டத்தில் சுகாதார செலவுகள் அதிகரித்துள்ளது. அதனால் சுகாதார காப்பீட்டிற்கான பிரிவு 80D விலக்கு வரம்பை அரசாங்கம் உயர்த்த வேண்டும் என பல்வேறு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது 27,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. வீட்டுக் கடன் வரி சலுகைகள்.

வரவிருக்கும் பட்ஜெட்டில் வீட்டு கடன் அசல் மற்றும் வட்டி செலுத்துவதற்கான வரி விலக்குகளை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு நிபுணர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வீட்டுக் கடனுக்காக வரி செலுத்துதலின் மீது கோரக்கூடிய அதிகபட்ச வரிவிலக்கு ஒரு நிதியாண்டுக்கு ரூ.2 லட்சம் ஆகும்.

5. LTCG வரி நிவாரணம்.

பட்ஜெட் 2023 மூலமாக சந்தையில் சில்லறை மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்கு முதலீட்டாளர்களுக்கு LTCG வரி சலுகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என சில தொழில் வல்லுனர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.