உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உக்ரைன் – ரஷ்யா போரில் தற்போது ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேசத் தான் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இன்று வரை இரு தலைவர்களும் ஒருமுறை கூட நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை. கடைசியாக 2019-ல் பாரிஸில் சந்தித்ததே இவர்களின் இறுதிச் சந்திப்பாகும்.

4 ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போரினால் இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் ராணுவம் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன. இந்தச் சூழலில், “அமைதி திரும்புவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட நான் தயங்க மாட்டேன்; தேவையென்றால் மாஸ்கோவிற்கே செல்வேன்” என்று செலன்ஸ்கி கூறியுள்ளார்.

செலன்ஸ்கியின் இந்தத் திடீர் மனமாற்றம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மேற்கத்திய நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், அது உலக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.