ஐபிஎல் 2026 தொடரில் இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற 58-வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 201 ரன்கள் என்ற கடினமான இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு, ரோஹித் சர்மா (25) மற்றும் ரையன் ரிகெல்டன் (48) சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
எனினும், ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தபோது களமிறங்கிய இளம் வீரர் திலக் வர்மா, ஆட்டத்தின் போக்கை மாற்றினார். வெறும் 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அபாரமாகச் சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை ஒரு பந்து மீதமிருக்கையிலேயே மும்பை பக்கம் திருப்பினார்.
வெற்றி ரன்களை அடித்தவுடன் திலக் வர்மா செய்த சைகைதான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. மைதானத்தில் இருந்த கேமராக்களை நோக்கி தனது கைகளால் ரோஹித் சர்மாவின் ஜெர்சி எண்ணான ’45’ என்பதைச் சைகையாகக் காட்டினார். தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ரோஹித் சர்மாவிற்கு இந்த இன்னிங்ஸை அர்ப்பணிப்பதாக அவர் இதன் மூலம் உணர்த்தினார்.
Tilak showing “45” and saying “Rohit bhai, Rohit bhai” after finishing the match 😭❤️ pic.twitter.com/FGs6DMhHLF
— 🤸 (@Arrestpandya) May 14, 2026
திலக் வர்மாவின் இந்த சைகையைப் பார்த்தவுடன் டக்-அவுட்டில் இருந்த ரோஹித் சர்மா மிகுந்த நெகிழ்ச்சியடைந்தார். புன்னகையுடன் காணப்பட்ட ரோஹித், பின்னர் மைதானத்திற்குள் வந்து திலக் வர்மாவைக் கட்டியணைத்துப் பாராட்டினார். ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, இந்தத் தார்மீக வெற்றி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அபார ஆட்டத்திற்காகத் திலக் வர்மா ‘ஆட்ட நாயகன்’ விருதைப் பெற்றார். “ரோஹித் அண்ணா ஒரு சிறந்த வழிகாட்டி, அவருக்கு இந்த இன்னிங்ஸை அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று போட்டிக்குப் பிறகு திலக் வர்மா தெரிவித்தார்.
