அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், உலக நாடுகள் மீது வரி உயர்வுகளை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறார்.

சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் என பல்வேறு நாடுகள் இந்த அமெரிக்க வரி நடவடிக்கையால் பாதிக்கப்படுகின்றன. சீனாவுக்கு எதிரான வரி உயர்வுகளைச் சீட்டாட்ட பாணியில் விளக்கிய டிரம்ப், “அவர்களிடம் சில கார்டுகள் இருக்கலாம், ஆனால் எங்களிடம் சிறந்த கார்டுகள் உள்ளன. அவற்றை பயன்படுத்த விரும்பவில்லை, பயன்படுத்தினால் சீனா அழிந்து போகும்” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.

மேலும், சீனா அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை நிறுத்தினால், 200 சதவீத வரி விதிக்க தயங்கமாட்டேன் என்றும் தெரிவித்தார். அதேசமயம், சீனாவுடனான உறவுகளை மேம்படுத்த விரும்புவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்கோ அல்லது அதற்குப் பிறகு சீனாவுக்கு செல்ல திட்டமிடுவதாகவும் கூறிய டிரம்ப், இருநாடுகளுக்கும் சிறந்த உறவுகள் அமையும் என்ற நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.