சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரை சேர்ந்த 8 மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் அக்காள், தங்கையான 2 மாணவிகள் நேற்று பள்ளிக்கு சென்றனர். அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் திடீரென காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து சிறுமிகளின் தந்தை ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் சிறுமிகளின் தந்தை செல்போனில் இருந்த இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தை பார்த்தபோது சிறுமிகளுக்கு அடையாளம் தெரியாத நபருடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதற்காக சிறுமிகள் வீட்டில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து புதிய செல்போன் மற்றும் சிம் கார்டு வாங்கி, தந்தையின் செல்போனில் இருந்து இன்ஸ்டாகிராம் முகவரியயை பயன்படுத்தி அந்த நபருடன் பழகியுள்ளனர். அவர் இரண்டு சிறுமிகளையும் கடத்திச் செல்ல திட்டமிட்டார்.

இதற்காக சிறுமிகள் பள்ளிக்கு செல்லாமல் சென்னை விமான நிலையத்திற்கு சென்றது விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனா, தலைமை காவலர்கள் ராயப்பன், சங்கர் ஆகியோர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கேரளாவுக்கு கடத்த இருந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இதனையடுத்து தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.