புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த சங்கர்(56), சுஜாதா(62), சுகுந்தன்(38) ஆகிய பேரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து வரும் தங்களது உறவினர்களை அழைத்து வருவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வேனில் சென்றுள்ளனர். அந்த வேனை துரை என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உறவினர்களான சுரேஷ்(60), தமிழரசி(59), விக்னேஸ்வரன்(35), அலுவின்(36), அவரது மனைவி வினோதினி(35) மகள் விநாலி (1 1/2) ஆகியோரை அழைத்துக் கொண்டு புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்கூத்தப்பாக்கம் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பு கட்டை மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரும்பு தடுப்பு வேனின் முன் பகுதியில் சொருகி பின் பகுதி வழியாக வெளியே வந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த டிரைவர் உள்பட 10 பேரையும் போலீசார் மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த சுரேஷ், குழந்தை விநாலி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்போகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.