உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 14 வயதுடைய பட்டியலினப் பெண், இரண்டு உயர் சாதியினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு நரேஷ் சிங் மற்றும் ஹர்விந்திர குமார் என்ற இரண்டு உயர் சாதியினரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார்.

அதன் பின்னர் மிரட்டல் விடுத்து 100 ரூபாயை கொடுத்து நடந்த விஷயத்தை வெளியில் தெரிவிக்காமல் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு பணம் கொடுத்து, தொடர்ந்து தன்னை வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். சிறுமியின் புத்தகப்பையில் பணம் இருந்ததை பார்த்து தாய் விசாரித்ததால்  இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த கொடுமையான சம்பவத்தை தாய் கேட்டு அதிர்ச்சியடைந்து, அக்டோபர் 8 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளான நரேஷ் சிங் மற்றும் ஹர்விந்திர குமாரை கைது செய்துள்ளனர்.