சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரில் வசிக்கும் இளம்பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் நெதர்லாந்தில் வசிக்கும் டாக்டர் எனக்கூறி முகமது சலீம் என்பவர் செல்போனில் என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், எனக்கு கிப்ட் பார்சல் அனுப்பி உள்ளதாகவும் கூறினார். மேலும் கிப்ட் பார்சலை பெற 28 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதனை நம்பி ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு 28 ஆயிரம் ரூபாயை அனுப்பினேன். இதனையடுத்து மற்றொரு நபர் செல்போன் மூலம் என்னை தொடர்பு கொண்டு பார்சலை ஸ்கேன் செய்து பார்த்த போது லட்சக்கணக்கில் வெளிநாட்டு பணம் இருப்பது தெரிகிறது. அதற்கு அபராத கட்டணமாக 77 ஆயிரம் ரூபாய் கட்டினால் உங்களுக்கு பார்சல் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார். அந்த பணத்தையும் அனுப்பி வைத்தேன். இதனை தொடர்ந்து வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்ற ஒரு லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என தெரிவித்தனர்.

இப்படி அடுக்கடுக்காக பல லட்சங்களை கொடுத்தேன். அதன் பிறகு தான் பணமோசடி கும்பல் என்னிடம் பணம் பறித்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் நைஜீரியாவை சேர்ந்த பாலினஸ் சிக்கேலுவோ, சிலிட்டஸ் இகேசுக்வு ஆகியோர் டெல்லியில் பதுங்கி இருந்து பணம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.