உத்திரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான தில்ஷாத் என்ற இளைஞர், சமூக ஊடகங்கள் மூலம் சீதாபூரில் உள்ள லஹர்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புகள் மூலமாக நட்பு வைத்திருந்தார். ஒருவரையொருவர் நேரில் சந்திக்காத நிலையில், இருவருக்கும் இடையே காதல் உருவானது. பலமுறை அந்த பெண்ணை நேரில் பார்க்க முயற்சித்த போதும், அந்த பெண் தொடர்ந்து பல காரணங்களைச் சொல்லி சந்திப்பை தவிர்த்தார். இருவரும் பிப்ரவரி 14, 2025 அன்று திருமணம் செய்வதென முடிவு செய்தனர்.

திருமண நாளன்று தில்ஷாத் தனியாக லஹர்பூர் சென்றார். அங்கு முன்பே திட்டமிட்டபடி அந்த பெண்ணைக் காண முடியாமல், தொலைபேசி மூலம் காஜி அவர்களிடம் நிக்காஹ் (திருமணம்) செய்துவைக்கப்பட்டது. திருமணச் சான்றிதழ் கையளிக்கப்பட்டபின், மணமகளின் முகத்தை நேரில் பார்த்த தில்ஷாத், அவர் 57 வயதானவர் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தன்னைவிட 32 வயது மூத்தவர் என்பதை அறிந்ததும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தில்ஷாத், தனது வீட்டிற்குத் திரும்பினார்.

திருமணத்திற்குப் பிறகு, ஏப்ரல் மாதம் தொடங்கி, இருவரும் ஒருவரை ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 2025 ஏப்ரல் 22 அன்று, அந்த பெண் ஹர்தோய் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்து, தில்ஷாத் மற்றும் மூவர்மீது, ரூ.2 லட்சம் பணம் மற்றும் ஒரு பைக் கேட்டதாக கூறி குற்றம் சாட்டினார். தில்ஷாத் தரப்பில், பெண்ணை நேரில் காணமுடியாத நிலையில், வற்புறுத்தலின் கீழ் தொலைபேசி மூலம் திருமணம் நடைபெற்றது, ரூ.5 லட்சம் பணம் கேட்டார்கள் என்றும், திருமண மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டிருந்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதும், மே மாதம் இரு தரப்பினரும் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகக் கூறப்பட்டனர். அதில், இருவரும் கடுமையான குற்றச்சாட்டுகளை பரஸ்பரம் முன்வைத்தனர். இறுதியாக, பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில், இருவரும் தனித்தனியாக வாழ ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் உருவாகும் உறவுகளின் உண்மைத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பழகும் முன் நேரில் சந்தித்து உண்மை உறுதி செய்தல் அவசியம் என்பதை சமூக வலைதளங்களில் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.