உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் திமுகவை ஊழல் கட்சி என்று கூறியதோடு அவர்கள் 36,000 கோடி வரை ஊழல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் அறிக்கை மூலம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது, அதிமுக பாஜக கூட்டணி என்பது தோல்வி கூட்டணி. அந்த அணிக்கு தொடர் தோல்வியை தமிழக மக்கள் கொடுத்துள்ளனர். இந்த தோல்வி கூட்டணியை தான் மீண்டும் அமித்ஷா உருவாக்கியுள்ளார். அதிமுக நீட் தேர்வை, மும்மொழி கல்விக்கொள்கையை, வக்பு மசோதாவை எதிர்ப்பதாக கூறிவிட்டு தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையாது என்று அமித்ஷா கூறாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூட அவர் பேச வாய்ப்பு கொடுக்கவில்லை. செய்தியாளர்கள் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பியபோது நீட் தேர்வு சரியானது என்று தன்னுடைய கருத்தை கூட அமித்ஷாவால் நிலையாக கூற முடியவில்லை. அவர் அதற்கு பதில் நீட் தேர்வு என்பது திசை திருப்பும் செயல் என்று மட்டுமே கூறினார். அதிமுகவுடன் கூட்டணி அறிவித்த அதே மேடையில் ஊழலை பற்றி அவர் பேசியுள்ளார். அமித் ஷா பேசியதை பார்த்து தமிழ்நாடு மக்கள் சிரிக்க தான் செய்வார்கள். ஊழலுக்காக இரண்டு முறை பதவி இழந்து 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் ஊழல் பற்றி பேசுவது தகுதி வாய்ந்ததா. என்று கூறியுள்ளார்.