தமிழக வெற்றிக் கழகத் தலைவரான நடிகர் விஜய், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காகத் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட விஜய், கரூரில் திறந்த வேனில் நின்று உரையாற்றியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஏற்பட்ட துயரச் சம்பவத்துக்குப் பிறகு, உள் அரங்கு கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று வந்தார். இந்நிலையில், கட்சியின் அடுத்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தை அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடத்தத் திட்டமிட்ட தவெக, புதுவை உப்பளம் மைதானத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரியது. முதலில் ‘ரோடு ஷோ’வுக்கு புதுவை போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், முதல்வர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தைச் சந்தித்து மனு அளித்தார்.
இதையடுத்து, புதுச்சேரி துறைமுக வளாகத்தில் முழு பகுதியையும் பொதுக்கூட்டம் நடத்தவும், 10 ஆயிரம் பேர் பங்கேற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழை காரணமாகத் தண்ணீர் தேங்கியுள்ள துறைமுக வளாகத்தின் தளத்தைச் சமன் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்யும் வகையில், மேடைக்கு பதிலாக விஜய் பிரசார வாகனத்தில் இருந்தே பேச உள்ளார்.
கூட்டம் உள்ளே வருவதற்கு மற்றும் வெளியே செல்வதற்கு வசதியாக காம்பவுண்ட் சுவரை உடைத்து மேலும் இரண்டு வாசல்கள் அமைக்கப்பட உள்ளன. கியூ.ஆர். கோடுடன் 10,000 பேரை மட்டும் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வருகிற 9-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 12 மணி வரை சுமார் 45 நிமிடம் விஜய் பேச திட்டமிட்டுள்ளதால், இந்த பொதுக்கூட்டம் தவெக நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
