சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சமீபத்தில் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைச் சந்தித்ததாகவும், இது காங்கிரஸ்-தவெக கூட்டணி மாற்றத்துக்கான தொடக்கமா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த செல்வப்பெருந்தகை, “இந்தியா கூட்டணியை யாரும் சிதைக்கவும் முடியாது, உடைக்கவும் முடியாது. இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைக்கப்பட்ட 5 பேர் குழுவின் மூலமாக மட்டுமே நடப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். திமுகவிடம் இந்தக் குழுதான் அதிகாரபூர்வமாகப் பேசியதாகவும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை திமுக குழு அமைக்கப்பட்ட பிறகு தொடரும் என்றும் அவர் கூறினார். “கூட்டணி தொடர்பாகப் புற வாசல் வழியாக காங்கிரஸ் ஒருபோதும் பேசாது, நேர் வழியில் தான் செல்லும். பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யைச் சந்தித்தது குறித்து எனக்கோ, தமிழக காங்கிரஸ் கட்சிக்கோ தெரியாது. அவர் சந்தித்தது உண்மை என்று தெரியவந்தால், மேலிடத்துக்குத் தகவல் தெரிவிப்போம். அதன் பிறகு நடவடிக்கை எடுப்பது குறித்து மேலிடம் முடிவெடுக்கும்” என்றும் அவர் தெரிவித்தார். ஒருவேளை அவர் வேறு விஷயமாகக் கூடச் சென்றிருக்கலாம் என்றும் அரசியல் நோக்கில் பார்க்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.