திருச்செங்கோடு அடுத்த குண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கபில் ஆனந்த்(41). இவர் லாரி டிரைவர். இவரது மனைவி நதியா. இந்த தம்பதியினருக்கு 12-ஆம் வகுப்பு படிக்கும் ஹரி, 10-ஆம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது.

இரண்டு மகன்களும் தேர்வில் வெற்றி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கபில் ஆனந்த் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் அறைக்குள் ஓடுவதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த நதியா சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை வரவழைத்தார்.

பின்னர் அவர்கள் கதவை உடைத்து கபில் ஆனந்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கபில் ஆனந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.