மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அடுத்த தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அரையாண்டு தேர்வு நடைபெறுவதால் கடந்த 14-ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு சென்று மும்முரமாக படித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பலத்த காற்று வீசியதால் எதிர்பாராதவிதமாக மரம் முறிந்து மாணவ மாணவிகள் மீது விழுந்தது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பள்ளி ஊழியர்கள் மாணவ மாணவிகளை மீட்டனர். இதில் விஜயா, மதுஸ்ரீ உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.