
மிசூரியைச் சேர்ந்த அமெரிக்க பயண வலைப்பதிவர் நிக் மேடோக், இந்திய ரயிலில் 15 மணி நேரம் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்தப் பிறகு கடுமையான சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயணம் செய்து வருகிற இவர், இந்திய ரயில் பயணத்தில் தான் மிகக் கடுமையான அனுபவத்தை எதிர்கொண்டதாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
அவர் பகிர்ந்த வீடியோவில், ஆக்ஸிஜன் முகமூடி அணிந்தபடி மருத்துவ படுக்கையில் இருக்கிறார். “இது ரயில் பயணத்தால் ஏற்பட்டதா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் நுரையீரல்கள் பாதிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரயிலின் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியில் இருந்த சுகாதாரமற்ற கழிப்பறையை காண்பிக்கும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். பயணத் தேதி மற்றும் ரயிலின் விவரங்கள் குறிப்பிடப்படாத போதிலும், “இனி ஒருபோதும் இப்படி பயணிக்கமாட்டேன்” என உறுதி கூறியுள்ளார்.
View this post on Instagram
மேடோக்கின் இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் இந்திய ரயில்கள் குறித்து தவறான படம் காட்டுகிறாரா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனமும் செய்துள்ளனர்.
“சலுகை பெற்ற வெளிநாட்டு பயணிகள் ஏழ்மையான பகுதிகளுக்குள் சென்று, அதை முழு படமாக்குவதும், பின்னர் விருப்பங்களைப் பெறுவதும் தவறான அணுகுமுறை,” என சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், இந்திய ரயில்களில் சுகாதார நிலை மீதான கவனமும், வெளிநாட்டு பயணிகளின் பார்வையும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.