இந்திய கிரிக்கெட் அணியின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் அவருடைய பெற்றோரும் உடன் இருப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
அதாவது இளம் வயதிலேயே இந்திய அணியில் தடம் பதிக்கும் இந்த வீரருக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் இந்த முக்கிய முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. தற்போது 15 வயதே ஆகும் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, சீனியர் கிரிக்கெட் அணியில் விளையாடத் தேர்வாகியுள்ளார். மிகக் குறைந்த வயதில் இத்தகைய சவாலான சர்வதேச சுற்றுப் பயணத்தை அவர் எதிர்கொள்வதால், அவரின் மன உறுதி மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடர்களில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்த அனுமதி பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணிக்காக மிக இளம் வயதில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை 15 வயதில் அறிமுகமானதன் மூலம் வைபவ் உடைத்தெறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
