ஐபிஎல் 2025 தொடரின் நான்காவது போட்டி மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோத, கடைசி வரை பரபரப்பாக நடந்த போட்டியில் லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முக்கியக் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆட்டத்தில் 6 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டு டக் அவுட்டாகிய அவர், கடைசி ஓவரில் விக்கெட் கிடைக்கக்கூடிய நிலையில் ஸ்டம்பிங் செய்ய தவறியது லக்னோவின் தோல்விக்கு வழிவகுத்தது.

போட்டி முடிந்த உடனே, லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா, ரிஷப் பண்டிடம் கடுமையாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சீசனிலும் கேஎல் ராகுலிடம் இதேபோல் பொதுவெளியில் கடுமையாக நடந்து கொண்டார். அதனால் கே.எல்  ராகுல் லக்னோ அணியிலிருந்து விலகினார். தற்போது அவர் டெல்லி அணிக்காக விளையாடுகிறார். இந்நிலையில் ரிஷப் பண்ட் மீது சஞ்சீவ் காட்டிய அதே அணுகுமுறை மீண்டும் ஒருமுறை ரசிகர்களிடையே விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இந்த சம்பவம் நடந்த போது ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும், லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் நின்றுகொண்டிருந்தார். ஆனால் அவர் எந்தக் கருத்தும் வெளியிடாமல் அமைதியாக இருந்தார். பொதுவாக உடைமாற்றும் அறையில் வீரர்களிடம் பேசும் பணி பயிற்சியாளர்களுக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா நேரடியாக நுழைந்து வீரர்களிடம் பேசுவதை ரசிகர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். மேலும் “பணம் செலவழித்தால் நல்ல அணியை வாங்கலாம்; ஆனால் உண்மையான கிரிக்கெட் அறிவை பணத்தால் வாங்க முடியாது” என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.