திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட பெண்கள் லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தும்பிச்சம்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரி, சுதா மற்றும் பாண்டியம்மாள் ஆகிய மூவரும் இணைந்து, தலா ரூபாய் 5000 கொடுத்தால், ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 5 லட்சம் வரை லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி கிராம பெண்களை ஏமாற்றி உள்ளனர்.

அதனை நம்பிய பெண்கள் ஒவ்வொருவரும் தங்களது குழுவில் உள்ள 20 முதல் 25 நபர்களை இணைத்து மொத்தமாக 140-க்கும் மேற்பட்ட பெண்கள் தலா ரூபாய் 5000 வீதம் வசூல் செய்து மொத்தமாக ரூபாய் 7 லட்சத்தை மூவரிடமும் கொடுத்துள்ளனர். அதன் பின் லோனை பெற்றுத் தருமாறு சம்பந்தப்பட்ட 3 பெண்களிடம் கேட்டபோது, மேலும் அனைவரும் இணைந்து ரூபாய் 1.5 லட்சம் வசூல் செய்து கொடுத்தால் லோனை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து 30 மகளிர் குழு தலைவிகள் இணைந்து லோன் பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த மூன்று பேரின் மீது புகார் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.