வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து கோட்டையூர் எருக்கம்பட்டு கிராமங்களுக்கு தினமும் பள்ளி மாணவர்களுக்காக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று காலை 7.45 மணிக்கு அரசு பேருந்து பேர்ணாம்பட்டிலிருந்து புறப்பட்டு எருக்கம்பட்டு கோட்டையூர் கிராமங்களுக்கிடையே சென்று கொண்டிருந்தது. 20-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் கோட்டையூர் கிராமத்தில் நடைபெறும் பணிக்கு செல்வதற்காக பேருந்தில் எறியுள்ளனர்.

மீதமுள்ள பணியாளர்கள் ஏறுவதற்குள் டிரைவர் சிவகுமார் பேருந்தை இயக்கியதாக தெரிகிறது. இதனால் பாதி பேரை ஏன் பேருந்தில் ஏற்றவில்லை என கேட்டதற்கு பேருந்து டிரைவர் பேரணாம்பட்டில் பள்ளி மாணவர்கள் இறக்கிவிட்டு சென்னைக்கு பேருந்தை இயக்க வேண்டும். நேரம் ஆகிவிட்டது என கூறியதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த டிரைவர் சிவகுமார் பேருந்தை திடீரென பிரேக் போட்டு இருக்கையில் இருந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த பேருந்து குறுகலான பாதையில் பேருந்து தானாக நகர்ந்து சென்றதால் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சந்திரா என்பவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதே போல 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் விமலா, ராஜேஸ்வரி, சகுந்தலா உள்ளிட்ட பத்து பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சந்திரா மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.