ஈஜிப்தின் மன்சூரா பல்கலைக்கழக மருத்துவமனையில், புதிதாகப் பிறந்த 11 நாட்கள் வயது குழந்தையின் வயிறு அசாதாரணமாக வீங்கியதால், மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
எந்தவித அறிகுறிகளும் காட்டாமல் குழந்தையின் வயிறு பெரிதாக விரிந்ததால், கவலைப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அல்ட்ராசவுண்ட் சோதனையில் 8×6 செ.மீ. அளவுள்ள மென்மையான, இயங்காத திண்மப்பொருளைக் கண்டறிந்த மருத்துவர்கள், மேலும் கான்ட்ராஸ்ட்-என்ஹான்ஸ்ட் கம்ப்யூட்டர் டோமோகிராஃபி ஸ்கேன் மூலம், நீண்ட எலும்புகள், விலா எலும்புகள், முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள் மற்றும் மென்மையான திசுக்கள் கொண்ட விசித்திரமான அமைப்பு இருப்பதைக் கண்டனர். இது ‘ஃபீடஸ் இன் ஃபீடு’ எனப்படும் அரிய மருத்துவ நிலை, அதாவது கருவுக்குள் மற்றொரு கரு வளர்வது என உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த அரிய நிலை குறித்து அக்டோபர் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்டது. இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை மூலம் அந்த விசித்திர அமைப்பு வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
நுண்ணோக்கி பரிசோதனையில், அது வளர்ந்த கரு திசுக்கள், தோல் மற்றும் குடல் திசுக்களைக் கொண்டிருப்பது தெரியவந்தது. ஆச்சரியமாக, குழந்தைக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல், சாதாரணமாக உணவு உட்கொண்டு இருந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, குழந்தை ஆரோக்கியமாக வீடு திரும்பியது. இந்த அற்புதமான மருத்துவ சம்பவம், மருத்துவ உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
