இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான இஷான் கிஷனின் தற்போதைய செயல்பாடு குறித்து முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். இந்திய அணிக்காக தொடர்ச்சியாகச் சொற்ப ரன்களில் வெளியேறி வரும் இஷான் கிஷனை அணியில் தொடர்ந்து தக்கவைப்பது குறித்து அவர் தனது தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரசாத், “நான் இந்திய அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடியுள்ளேன்; கடந்த 30 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளைத் தீவிரமாகக் கவனித்தும் வருகிறேன். ஆனால், இஷான் கிஷனைப் போலப் பேட்டிங் செய்யவே தெரியாத, அணிக்குப் பயன்படாத ஒரு வீரரை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்று மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக விளையாடிய முக்கிய போட்டிகளில் இஷான் கிஷன் தனது திறமையை நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று சுட்டிக்காட்டிய அவர், தொடர் தோல்விகளுக்குப் பிறகும் அவருக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறது என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார். இத்தகைய செயல்பாடுகளால் அணியின் வெற்றி வாய்ப்பு பெருமளவில் பாதிக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்தார்.
எனவே, இந்திய அணியின் நலனைக் கருத்தில் கொண்டு இஷான் கிஷனை பிசிசிஐ உடனடி நடவடிக்கை எடுத்து அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், திறமையற்ற ஒரு வீரரைத் தொடர்ந்து அணியில் தேர்வு செய்து வரும் தேர்வுக்குழு உறுப்பினர்களையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார். வெங்கடேஷ் பிரசாத்தின் இந்தக் கருத்துகள் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
